பசி…
பசி என்று தான்
உன்னை நோக்கி
ஓடி வந்தேன்…
பக்திமானே…
ஏதாவது
சாப்பாடு கொடுப்பாய்
என்ற நம்பிக்கையுடன்…
ஆனால் —
“ச்சீ… போ!”
பசித்த வயிற்றிற்கு
உணவளிக்க
உன் கடவுள்
உனக்கு சொல்லவில்லையா?
பாகவதம் ஓதுகிறாய்…
பகவத் கீதையைப் போதிக்கிறாய்…
ஆனால்
சகல உயிர்களிலும்
அந்த இறைவன் இருக்கிறான்
என்பதை
உன் மனம் ஏன் உணரவில்லை?
“லொள்” என்று
நான் குரைத்தேன்…
நீ
கல் எடுத்தாய்…
அடித்தாய்…
திருடன் நீ!
முழுத் திருடன் நீ!
பொதுவாய் இருந்த
இந்த உலகத்தை
உனக்காய்
ஒதுக்கி வைத்துக் கொண்ட
முழுத் திருடன் நீ!
உயிரற்ற
ஒரு கல்லுக்குப்
உபச்சாரம்…
வாயில்லா சீவன்கள்
கோயிலுள் நுழைந்தாலே
அபச்சாரம்…
உங்கள் செயல்களே
உங்களை
மகிழ்விப்பதற்கும்
துன்புறுத்துவதற்குமான
அச்சாரம்…
எங்களின் கோரம்
எங்கள் உருவத்தில்…
உனது கோரம்
உன் உள்ளத்தில்!
ஆதலால்…
மனிதா!
நீயே
எங்களை விட
கொடூரன்!